பென்னாகரம் அருகே ரேஷன் கடையில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆய்வு

பென்னாகரம்:
பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பருவதனஅள்ளி ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசி, பருப்பு, டீ தூள் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, கடையில் இருப்பு வைத்துள்ள உணவு பொருட்கள் குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களின் பதிவேடுகளை பார்வையிட்டு, பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில பொது குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ராசா உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.