பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோரையாறு தடுப்பணையில் அதிகாரிகள் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பாப்பம்பாடி, மூகாரெட்டிப்பட்டி, புதுப்பட்டி, காமராஜர் நகர், நாகலூர், கவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களின் நீர் ஆதாரமாக கோரையாறு உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே தோட்டிக்கல் என்ற இடத்தில் கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டி பல ஆண்டுகள் ஆகிய நிலையில், இருபுறங்களிலும் உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பணையை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் மனு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் அரூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆசாம்பாஷா, உதவி பொறியாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் தோட்டிக்கல் தடுப்பணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கோரையாற்றின் வழித்தடங்களையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






