வேப்பாடி ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து கலெக்டர் ஆய்வு


வேப்பாடி ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து கலெக்டர் ஆய்வு
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பணை

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா செம்பைனூர் கிராமத்தில் உள்ள வேப்பாடி ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். வாணியாறு அணைக்கு செல்லும் இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி தேக்கி வைத்தால் அந்த பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் அந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யும். எனவே வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டது. அப்போது வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடியுமா? என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தி செம்பைனூர் கிராமத்தில் உள்ள வேப்பாடி ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த பகுதியில் தடுப்பணை கட்டினால் எவ்வளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் கேட்டறிந்தார். இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த ராமன், விஜயராகவன், கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story