தடங்கம் உரக்கிடங்கில் குப்பைகளை பிரித்து, அகற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி:
தர்மபுரி அருகே தடங்கம் உரக்கிடங்கில் குப்பைகளை பிரித்து, அகற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர் சாந்திஅறிவுறுத்தினார்.
உரக்கிடங்கில் ஆய்வு
தர்மபுரி நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் தடங்கம் பகுதியில் உள்ள உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் தடங்கம் உரக்கிடங்கில் பயோ மைனிங் முறைப்படி குப்பைகளை பிரித்து, அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 9 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகளில் முதல் கட்டமாக 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. 2-ம் கட்டமாக 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார்.
அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
அப்போது குப்பைகளை அகற்றும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். குப்பைகளை அகற்றும் பணியை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்க வேண்டும்.
இது தொடர்பான விவரங்களை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த பணிகள் முடிவடைந்த உடன் அந்த பகுதியில் அடர் வனக்காடுகளை உருவாக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.