தர்மபுரி அருகே நெல் மூட்டைகள் மாயமான விவகாரம்அரவை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே திறந்தவெளி நெல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கிடங்கிற்கு கடந்த சில மாதங்களில் 22 ஆயிரம் டன் நெல் கொண்டு வரப்பட்டதாகவும், அதில் 7 ஆயிரம் டன் இருப்பு குறைவதாகவும் புகார்கள் எழுந்தன. நெல் மூட்டைகள் மாயமானதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக துறை சார்ந்த கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளில் ஏற்கனவே கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட கூடுதலாக அரவைக்கு நெல் மூட்டைகள் வந்துள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை முழுமையாக அரவைக்கு அனுப்பும்போது எவ்வளவு நெல் மூட்டைகள் குறைந்துள்ளன என்பது குறித்து தெரியவரும். அப்படி நெல் மூட்டைகள் குறைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.