தர்மபுரி மாவட்டத்தில் நீர்வடி பகுதி திட்டப்பணிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டாரங்களில் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் 31 நீர் வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் சென்னை அலுவலகத்தில் இருந்து வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை, வேளாண்மை உதவி இயக்குனர் மணமல்லி, பொறியாளர் பால்ராஜ், கணக்க அலுவலர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய மாநில அளவிலான குழுவினர் நீர் வழிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி வேளாண்மை உதவி இயக்குனர் சகாய ராணி, உதவி பொறியாளர் பத்மாவதி ஆகியோர் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த திட்டத்தின் உலகளம் அமைப்பு, பெரிய தடுப்பணை, கசிவு நீர் குட்டை அமைக்கும் பணி, விவசாயிகளுக்கு உபகரணங்கள் வினியோகம் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
முன்னதாக வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் 20 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், 5 பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பான் மற்றும் 2 பயனாளிகளுக்கு தார்பாலின் ஆகியவற்றை வேளாண்மை இணை இயக்குனர் விஜயா முன்னிலையில் மாநில குழுவினர் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பூகானஅள்ளி நீர்வடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தடுப்பணையை சுற்றியுள்ள கிணற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதா என்று பயனாளிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பெரிய தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள நீர் செரிவூட்டும் ஆழ்துளை கிணறு ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் புலிக்கரை, சுங்கம்பட்டி, நல்லம்பள்ளி ஆகிய நீர்வழிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்வாடி பகுதி பணிகளை குழுவினர் ஆய்வுசெய்தனர்.