மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தினமும் ஒரு திருக்குறள் எழுதும் பணி; கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி:
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் படிக்கும் வகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு அதற்குரிய விளக்கமும் எழுதப்படுகிறது. இதை அந்த அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுகிறார்கள். இதன்படி கலெக்டர் அலுவலகம், பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் எழுதப்படுகிறது. இதேபோல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, நகராட்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வனத்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றிலும் தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்கப்படும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு திருக்குறளை எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியை கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.