உணவு பாதுகாப்பு, தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை:தேனி புதிய பஸ் நிலையத்தில் 15 கடைகளுக்கு அபராதம்


உணவு பாதுகாப்பு, தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை:தேனி புதிய பஸ் நிலையத்தில் 15 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:45 PM GMT)

தேனி புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் தொழிலாளர் துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். அப்போது 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி

அதிகாரிகள் ஆய்வு

தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள், குளிர்பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மனுஜ் ஷியாம் சங்கர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

20 கடைகளில் அவர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் அதிக விலைக்கு குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டதும், ஒரு கடையில் முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தராசு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இரு கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

15 கடைகளுக்கு அபராதம்

அந்த ஆய்வு முடிந்த சிறிது நேரத்தில், தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் தலைமையில், தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், சுகாதார ஆய்வாளர் சுல்தான் மற்றும் அலுவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 25 கடைகளில் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில், 4 கடைகளில் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ கெட்டுப்போன உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 9 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது பஸ் நிலைய வளாகத்தில் சிலர் பொது இடத்தில் நின்று புகைப்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவ்வாறு புகைப்பிடித்த 6 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர். பஸ் நிலையத்தில் அடுத்தடுத்து நடத்திய ஆய்வுகளில் ஒரே நாளில் 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story