ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளியில் ஆய்வு
பொள்ளாச்சியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 80 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ-மாணவிகளை வேறு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் சுகந்தி, வடக்கு ஒன்றிய ஆணையாளர் முத்துமணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சேதமடைந்த கட்டிடங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், தொப்பம்பட்டி பள்ளியில் மிகவும் பழுதடைந்த நிலையில் வகுப்பறை கட்டிடம் உள்ளது. அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒன்றியத்தில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கெடுத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒன்றிய பகுதி முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்து, மழையில் ஒழுகும் வகுப்பறை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். பயன்படுத்த முடியாத கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






