சென்னிமலை முருகன் கோவில் கோசாலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான கோசாலை மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கோசாலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட 52 பசுமாடுகள் உள்ளன. இதனை இரவு, பகலாக பராமரிக்க 2 பணியாளர்கள் உள்ளனர். இந்த கோசாலையில் பராமரிக்கப்படும் பசுமாடு மூலமாகத்தான் அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான தீர்த்த கிணற்றில் இருந்து தினமும் மலைமேல் உள்ள முருகனுக்கு பூஜை செய்ய படிக்கட்டுகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் பரஞ்சோதி சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான கோசாலைக்கு வந்தார். அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பசுமாடுகளை பார்வையிட்டார். அங்கு பசு மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அடிவாரத்தில் உள்ள கோவில் கிணறு, கோவில் பஸ்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். முன்னதாக கோவில் செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன் இணை ஆணையர் பரஞ்சோதியை வரவேற்றார். அப்போது கோவில் பணியாளர்கள் பாலு, அறிவு உள்பட பலர் உடனிருந்தனர்.






