காஞ்சீபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில்  கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் ஆய்வு
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆகியோர் காஞ்சீபுரம் மாநகராட்சிகுட்பட்ட செவிலிமேடு அரசு தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு, உணவின் தரத்தை பரிசோதித்து, மாணவ- மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அந்த பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு அங்கு குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சியில் 4.32 கோடி மதிப்பில் இருளர் இன பழங்குடியின மக்களுக்காக கட்டப்படும் 100 குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சிங்காடிவாக்கம் மேட்டுத்தெருவில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நோயால் பாதிக்கப்பட்ட ரவி என்பவரது வீட்டு்க்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

சிங்காடிவாக்கத்தில் அடர்வு முறையில் மாகன்று நடவு செய்தல் முறையை கேட்டறிந்து, அதற்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன முறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும் மருதம் ஊராட்சியில் ஆர்கானிக் முறையில் பராமரிக்கப்படும் எலுமிச்சை நடவு பண்ணையை பார்வையிட்டார்கள்.

இதனை தொடர்ந்து புத்தகரம் ஊராட்சியில் 5.91 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளி கழிவறை கட்டிடத்தையும், 29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், வேளாண் துணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பிரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலகள் கலந்து கொண்டனர்.


Next Story