148 பள்ளி வாகனங்கள் ஆய்வு
அரக்கோணத்தில் 148 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 10 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் அரக்கோணத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. ராணிபேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டுவேல் ஆகியோர் கலந்து கொண்டு அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா பகுதிகளை சேர்ந்த 27 பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 148 வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
வாகனங்களின் அமைப்பு, படிக்கட்டுகள், ஜன்னல்கள், அவசர வழி உள்ளிட்ட வசதிகள், தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பு, புத்தகங்கள் வைக்கும் அலமாரிகள், முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், பிரதிபலிப்பான் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தனர்.
10 வாகனங்கள் நிராகரிப்பு
ஆய்வின் முடிவில் 10 வாகனங்களில் பல்வேறு சிறு குறைகள் இருந்ததால் நிராகரிக்கப்பட்டன. இந்த வாகனங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின் மீண்டும் ஆய்வு முடிக்கப்பட்ட பின் உரிய சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் மஹபூப் பேக் தலைமையிலான வீரர்கள் தீ விபத்து ஏற்படும்போது தீ தடுப்பு வழிமுறைகளையும் மற்றும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் கோமதி, குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.