திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு


திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. டிரைவர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் பிரதீப் குமார் அறிவுரை வழங்கினார்.

திருச்சி

பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி இயக்கப்படுகிறதா? என்பது குறித்து கூத்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி வாகனங்களை ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட ஆய்வுக்குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில், பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும். டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணத்தின்போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும்.

கவனத்துடன் பணியாற்ற வேண்டும்

பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண், போலீஸ் நிலைய தொலைபேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தியிருக்க வேண்டும். வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் தெளிவாக தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வாகனத்தில் பொருத்த வேண்டும். டிரைவர்கள் தீயணைப்பான் கருவிகள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்களை கட்டாயம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். கட்டாயம் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை டிரைவர்கள் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. எனவே டிரைவர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் கடமையுணர்வோடு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

22 வாகனங்களில் குறைபாடு

இதனை தொடர்ந்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ விபத்து மற்றும் மீட்புமுறை குறித்து மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி பற்றியும் தங்களது உடல் பராமரிப்பு பற்றியும் 108 ஆம்புலன்ஸ் குழு மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 304 வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 22 வாகனங்களில் சில குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்து மீண்டும் மறுஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்து முடிக்கப்பட உள்ளது.

இந்த ஆய்வின்போது, லால்குடி ஆர்.டி.ஓ. வைத்தியநாதன், துணை கலெக்டர் பயிற்சி ஐஸ்வர்யா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமார், கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சந்திரசேகர், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story