வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.30¾ லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.30¾ லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த பணிகள் 6 ஒன்றியங்களில் 208 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி சார்பில் நடைபெற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

பாச்சல் ஊராட்சி குறவர் காலனியில் நடைபெற்று வரும் 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடத்தை அவர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொன்னேரி ஊராட்சி சின்னா கவுண்டனூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.10½ லட்சம் மதிப்பிலான கட்டிடப் பணி, பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட பெரிய ஏரியில் ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றுவரும் தூர் வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது ஏரியின் ஆழத்தை இன்னும் கூடுதலாக அதிகப்படுத்தி தூர்வார வேண்டும் எனவும், இதனால் அதிக நீர் சேமிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயம் செய்ய கூடுதலாக தண்ணீர் கிடைக்க வழி வகுக்கும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பெரிய பொன்னேரி பகுதியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹரிசாண்டல் பில்டர் பணியை ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர் பில்டர் செய்யப்பட்டு அதன் கழிவுகள் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என்பதனை ஊராட்சி மன்ற தலைவர் அ.நந்தினி அருள் என்பவரிடம் கேட்டறிந்தார்.

அங்கன்வாடி மையம்

பின்னர் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் தூய்மை சுகாதாரம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை, உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story