வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x

திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, காணை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்

கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா வருகை தந்தார். அவர், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் திருமுண்டீச்சுரம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து பெரியசெவலை ஊராட்சியில் ரூ.28 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்ட அவர், தரமான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு, பணியை விரைந்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

திறந்தவெளி கிணறு

பின்னர் இளந்துறை ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் திறந்தவெளி சமுதாய கிணறு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட அவர், அங்குள்ள தரிசு நிலத்தில் ஆண்டு முழுவதும் பயன்தரக்கூடிய வகையில் மாங்கன்று, எலுமிச்சை, நெல்லி, கொய்யா போன்ற மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாதிரி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு கூடுதலாக கைகழுவும் தொட்டி அமைக்க வேண்டுமெனவும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள கிளை நூலகத்தை பார்வையிட்டு வாசகர்களின் வருகைப்பதிவேடு, புத்தகங்கள் பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மாணவிகள் விடுதி

மேலும் விக்கிரவாண்டி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஹர்சகாய் மீனா அங்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என பார்வையிட்டதுடன் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதோடு தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டார்.

அதன் பிறகு காணை ஒன்றியம் செம்மேடு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயி சீத்தாராமன், தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் சொட்டுநீர் பாசன வசதியுடன் எண்ணெய் பனை அமைத்துள்ளதையும், அதற்கு ஊடுபயிராக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதையும் பார்வையிட்ட அவர், அந்த விவசாயியிடம் பாசனத்திற்கு தேவைப்படும் நீரின் அளவு, அறுவடைக்காலம், பயன்படுத்தப்படும் உரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சி.பழனி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, வேளாண் துணை இயக்குனர்(திட்டங்கள்) பெரியசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) சண்முகம், தாசில்தார்கள் ராஜ்குமார், ஆதிசக்திசிவக்குமரி மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், கேசவன், சுமதி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story