நெடுஞ்சாலைகள், பாலப்பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு


நெடுஞ்சாலைகள், பாலப்பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு
x

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நெடுஞ்சாலைகள், பாலப்பணிகளை தணிக்கை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

தணிக்கை குழுவினர் ஆய்வு

நெடுஞ்சாலைத்துறையில் சாலைகள் மற்றும் பாலப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய உள்தணிக்கை குழு ஆய்வு என்ற புதிய திட்டம் அமைக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைகள் அமைச்சர் எ.வ.வேலு கடந்த மாதம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் 22 குழுக்கள் சாலை மற்றும் பாலப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் வேலூர் நெடுஞ்சாலை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டத்தை சேர்ந்த பணிகளை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல், வேலூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ஆர்.என்.தனசேகரன் ஆகியோர் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் அடங்கிய தணிக்கை குழுவினர் கடந்தாண்டு நடைபெற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உயர்மட்ட பாலப்பணிகள்

வேலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 20 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் 2020-21-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் வேலூர் பாகாயம் முதல் அ.கட்டுப்படி சாலை வழியாக மேட்டுஇடையம்பட்டி வரையிலான 5 கிலோ மீட்டர் வரை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்துல் பணியை தணிக்கைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகேந்திரவாடி உபரிநீர் கால்வாயின் குறுக்கே ரூ.4 கோடியே 23 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளையும் தணிக்கைக்குழுவினர் பார்வையிட்டு அந்த பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினர்.

ஆய்வின்போது வேலூர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் நிர்மலா, ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் செல்வகுமார், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story