அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு


அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 2 Aug 2023 1:45 AM IST (Updated: 2 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே தரமற்ற உணவு வழங்கியதாக கூறி பெற்றோர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தரமற்ற உணவு வழங்கியதாக கூறி பெற்றோர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தரமற்ற உணவு

கோத்தகிரி அருகே பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் தரமற்ற பொருட்களை கொண்டு சத்துணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்குவதாக கூறி பெற்றோர்கள் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கூறி குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதையடுத்து கோத்தகிரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

பள்ளிகளில் தரமான பொருட்களை கொண்டு சத்துணவு சமைக்கப்படுகிறதா?, சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறதா?, குழந்தைகளுக்கு சத்துணவுடன் கொடுக்கப்படும் முட்டை தரமாக உள்ளதா?, நன்கு வேக வைக்கப்படுகிறதா? என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சத்துணவை சாப்பிட்டு உணவின் தரத்தை சோதனை செய்தனர். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் அப்பாதுரை கூறுகையில், கலெக்டர் உத்தரவின்படி ஆய்வு செய்ய 7 பள்ளிகள் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்று (அதாவது நேற்று) கொணவக்கரை, தப்பக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தேன். உணவு தரமாக உள்ளது. இதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்க உள்ளேன். இதே போல அதிகாரிகள் கோத்தகிரி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்றார். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக இருப்பதால் 2 அல்லது 3 பள்ளிகளுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களால் அனைத்து மையங்களையும் கவனிக்க முடிவதில்லை. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story