பொங்கல் பண்டிகையையொட்டிகுற்ற செயல்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்புபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


பொங்கல் பண்டிகையையொட்டிகுற்ற செயல்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்புபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:21+05:30)

பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் நகரில் குற்ற செயல்களை தடுக்க போலீசார், கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம்

.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக குயவர்களால் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பொங்கலுக்கு பெயர்போன கரும்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பொதுமக்கள், அப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட புதிய துணிமணிகள் வாங்கவும் மற்றும் பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் கடைவீதிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

குற்ற செயல்களை தடுக்க

விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும், துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக விழுப்புரம் நகரில் உள்ள எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் நேருஜி சாலை, காமராஜர் வீதிகளில் உள்ள துணிக்கடைகளுக்கும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதோடு, மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள், பொதுமக்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும். எனவே இதுபோன்ற குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மேலும் விழுப்புரம் எம்.ஜி.சாலைக்குள் நுழையும் பகுதியான வீரவாழியம்மன் கோவில் அருகிலும், காமராஜர் வீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில், போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதிலிருந்தவாறு ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துகொண்டே யாரேனும் திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனரா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று மாலை விழுப்புரம் நேருஜி சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா திடீர் ஆய்வு மேற்கொண்டு நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது போக்குவரத்து நெரிசலின்றி பொதுமக்கள் எளிதாக சென்று வர வழிவகை செய்யும்படியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் உடனிருந்தனர்.


Next Story