சுரங்கம், குவாரிகளின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்


சுரங்கம், குவாரிகளின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
x

கனிமவளத்துறை உரிமம் பெற்ற சுரங்கம், குவாரிகளின் டி.ஜி.பி.எஸ். ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் பெரும் கனிம வளமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பதற்கு 29 சுரங்க குத்தகை, சிறு கனிமங்களான கிரானைட் 39, உடைகல் 136, லைம் கங்கர் 7 மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்காக 3 பகுதிகளிலும் ஆக 214 சுரங்கம் மற்றும் குவாரிகளுக்கு குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளை குத்தகைதாரர்கள் தங்கள் சொந்த செலவில் டி.ஜி.பி.எஸ். ஆய்வு செய்து அந்த விவரத்தினை தொடர்புடைய துணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் புவியியல் மற்றும் சுரங்க துறை உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து டி.ஜி.பி.எஸ். ஆய்வு மேற்கொள்வதற்காக ஆணையர், புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள், குறித்த விவரங்கள், அனைத்து குத்தகைதாரர்களுக்கும், விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே இந்த பகுதிகளில் டி.ஜி.பி.எஸ். ஆய்வினை மேற்கொண்டு அதன் விவரத்தினை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் டி.ஜி.பி.எஸ். ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே டி.ஜி.பி.எஸ். ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத அனைத்து சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் உடனடியாக டி.ஜி.பி.எஸ். ஆய்வுகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே மாவட்டத்தில் டி.ஜி.பி.எஸ். ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத 197 சுரங்கங்கள் மற்றும் குவாரிகளிலும் உடனடியாக டி.ஜி.பி.எஸ். ஆய்வுகள் மேற்கொண்டு விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனருக்கு அறிக்கை அளிக்குமாறு தொடர்புடைய குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தவறினால் சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.


Next Story