பள்ளிகளில் காலை உணவு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்டம்
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனருமான சங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் சேலம் ராமலிங்க வள்ளலார் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மாணவர்களுக்கு வழங்கிய உணவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் சாப்பிட்டு பார்த்தார்.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது:-
86,056 மாணவ, மாணவிகள்
சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் 54 தொடக்கப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக 24 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1,253 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 86,056 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
உணவு வகைகள்
இத்திட்டத்தில் திங்கட்கிழமை ரவா உப்புமா- காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி- காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண் பொங்கல் - காய்கறி சாம்பார், வியாழக்கிழமை உடைத்த அரிசி உப்புமா - காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை கோதுமை ரவா காய்கறி கிச்சடி - காய்கறி சாம்பார் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணி சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் இக்காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி ஆகியோர் உடனிருந்தனர்.
ஏரிகள் புனரமைப்பு
பின்னர் சேலம் மாநகராட்சி மூக்கனேரியில் ரூ.23 கோடியில் ஏரியை புனரமைத்து அழகுபடுத்தும் பணிகளையும், பெரியார்நகர் பகுதியில் ரூ.25.40 கோடி மதிப்பீட்டில் 280 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு இருக்கிறதா? என்பது குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.