அரசு ஜீப்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தும் பணி

அரசு ஜீப்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அரசு ஜீப்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ஜீப்களை சில அலுவலர்கள் தங்களின் சொந்த வேலைக்காக பயன்படுத்துவதாகவும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் அரசு வாகனங்களை சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள அரசு ஜீப்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படும் அரசு ஜீப்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படும் ஒன்றியக்குழு தலைவர்களின் அரசு ஜீப் உள்பட 70 ஜீப்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு ஜீப்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு சென்னையில் இருந்தபடி கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள ஜீப்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது. தொடர்ந்து வருவாய்த்துறையில் உள்ள வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட உள்ளது என்றனர்.