மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
x

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் கூறுகையில், மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலர்களுக்கும், முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அவர்கள் வாழ்க்கை கருதி மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களில், சில மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மற்ற மனுக்கள் மீது 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தால் உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். தேவையில்லாமல் தீக்குளிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் எந்த ஒரு திட்டத்தை பற்றியும், உதவிகள் கோரியும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் எனது செல்போன் எண்ணான 9444175000-ஐ தொடர்பு கொண்டு கேட்கலாம். குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்-அப் மூலமாக கூட தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது, என்றார்.

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கூறுகையில், போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் தரும் புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் திருப்தி இல்லாத மனுதாரர்கள் வாரந்தோறும் புதன்கிழமை மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை முகாமிற்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் குறை தொடர்பாக எனது தலைமையில் போலீசார் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 145 மனுக்களில், 141 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 மனுக்கள் தான் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு மனு விசாரணை முகாம் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 345 மனுக்களில், 297 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 48 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேற்கண்ட சிறப்பு மனு விசாரணை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு தீர்வு காணப்படுவதால் பொதுமக்களிடம் இருந்து வரும் மனுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும் மற்றும் தங்களது பகுதிகளில் ஏதேனும் குற்ற செயல் நடந்தாலும் உடனடியாக மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.


Next Story