மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் வட்டார பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமை தாங்கி பேசினார். அப்போது, தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பழுதடைந்த மின் சாதனங்களை அகற்றி விட வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். எண்ணும் எழுத்தும் இயக்கம் சிறப்பாக நடைபெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், தா.பழூர் வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், சாந்திராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுதா ஆகியோர் பேசினர். பின்னர் பாப்பாந்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. உடையார்பாளையம் மேற்கு பள்ளி மாணவி சர்வாணிகா செஸ் போட்டியில் வெற்றி பெற்றதை பாராட்டி, அவருக்கு காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.