இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும்
நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
கண்காணிப்பு குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்தும், நிலுவைகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
1982-ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல சட்டத்தின்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வீடே இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. ஊராட்சிகள் வாரியக விண்ணப்பங்களை பிரித்து வழங்கினால் விரைவாக ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கலாம். இதனை செய்திட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிராகரிப்பதாக புகார்
தற்போது புலம் பெயர்ந்த (மற்ற மாநில) தொழிலாளர்கள் குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் பணி செய்து வருகிறார்கள். அவர்களை கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் பணி விவர சரிபார்ப்பு கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து தொழிலாளர்கள் கேட்டால் மனுவை நிராகரித்து விடுவதாக புகார்கள் வருகின்றது. ஆகவே கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், வருவாய் ஆய்வாளர்களுக்கும் இணையதளம் வாயிலாக அனுப்பப்படும் விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் சரிபார்த்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்ட பின்னர் தற்போது 246 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இதற்கு முன்னர் 2,500-க்கும் மேல் நிலுவையில் இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
எளிமைாக்க வேண்டும்
தொழிலாளர்களின் தொழில் சம்மந்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் பெறுவதில் இணையதளத்தில் பதிவு செய்வதில் உள்ள வழிமுறைகளை தொழிலாளர்களுக்கு எளிமைப்படுத்திட வேண்டும். அதேபோன்று அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் பெற இருவேறு திட்டங்களில் ஒரே பயனாளி பயன்பெறுவதை தவிர்க்கும் வகையில் சமூகநலத் துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளில் இருந்து தடையில்லா சான்று பெறுவதில் தாமதம் இருந்து வருகிறது என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், இக்கூட்டத்திற்கு வருகைப்புரிந்த தொழிற்சங்க உறுப்பினர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகள் இந்தியன் வங்கியின் மூலம் வழங்கப்படும் தொழிற்பயிற்சி வகுப்பிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படும் மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பிற்கான போட்டித் தெர்விலும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.