கொலை-வழிப்பறி குற்றவாளிகளை கண்காணிக்க போலீசாருக்கு அறிவுறுத்தல்
கொலை-வழிப்பறி குற்றவாளிகளை கண்காணிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2021-ம் ஆண்டு 20 கொலை வழக்குகளும், 2022-ம் ஆண்டு 14 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு 393 விபத்து வழக்குகளில் 413 பேர் உயிரிழந்துள்ளனர்.
2022-ம் ஆண்டு 368 வழக்குகளில் 377 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் 36 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது. 2022-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளதுபோல் 2023 ஆண்டும் உயிரிழப்புகளை குறைக்க வாகன விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
சூதாட்டம், லாட்டரி, கஞ்சா, குட்கா, மது விற்பனை, கொலை, வழிப்பறி ஆகியவற்றை தடுக்க போலீசார் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க ேவண்டும். மேலும் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் இ-சலான் நடைமுறையில் உள்ளது என்றார். தொடர்ந்து சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன? என ஆய்வு செய்தார்.