உளுந்து பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்


உளுந்து பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்க் காப்பீடு திட்டம்

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டம் தஞ்சை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தஞ்சை-1 பகுதிகளுக்கு ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனமும், தஞ்சை-2 பகுதிகளுக்கு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை-1 பகுதியில் பூதலூர், கண்டியூர், பாபநாசம், அய்யம்பேட்டை பிர்கா தவிர தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அம்மாப்பேட்டை வட்டாரங்கள் அடங்கும்.

தஞ்சை-2 பகுதியில் பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், சித்திரக்குடி முதன்மை, மருதக்குடி, ராயந்தூர், அரசூர் சின்ன ஆவுசாகிப் தோட்டம், தென்பெரம்பூர் ஆகியவை அடங்கும். அம்மாப்பேட்டை வட்டாரத்தில் உள்ள அகரமாங்குடி, பெருமாக்கநல்லூர், பொரக்குடி, செருமாக்கநல்லூர், சுரைக்காயூர், வடக்கு மாங்குடி, வையச்சேரி வேம்புக்குடி, ஆகிய கிராமங்களும், தேவராயன்பேட்டை, மேலசெம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், புலிமங்கலம், திருவையாத்துக்குடி ஆகிய கிராமங்களும் அடங்கும்.

31-ந் தேதி கடைசி நாள்

பயிர் இழப்புக்கு வழி வகுக்கும் வெள்ளம், வறட்சி, பருவம் தவறிய மழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். இந்த திட்டத்தில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் பங்கு கொண்டு பயன்பெறலாம்.

கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு பெற அருகில் உள்ள வங்கிக்கிளை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், பொது சேவை மையங்கள், காப்பீடு நிறுவனம் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட முகவரை தொடர்பு கொள்ளலாம். அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளமான http://www.pmfby.gov.in என்ற முகவரியில் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

உளுந்து பயிருக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.17 ஆயிரத்து 950 ஆகும். இதற்கு பிரீமியமாக 1.5 சதவீதம். விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ.270 ஆகும். கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர்க் காப்பீடு செய்து பயன் அடைய வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story