பெண்ணுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தொகையை வழங்க வேண்டும்:: தீர்ப்பாயம் உத்தரவு


பெண்ணுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தொகையை வழங்க வேண்டும்:: தீர்ப்பாயம் உத்தரவு
x

சேவை குறைபாட்டால் குளறுபடி ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கரூர்

காப்பீடு சான்றிதழ் வழங்கவில்லை

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 43). இவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராஜசேகர். இந்த தம்பதிக்கு ஸ்ரீநிதி, தரணி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ராஜசேகர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக கடந்த 2021-ம் ஆண்டு ரூ.22 ஆயிரத்து 717-ஐ பிரீமியம் தொகையாக செலுத்தி ரூ.50 லட்சத்திற்கு காப்பீடு எடுத்துள்ளார்.

ஆனால் சுமார் 2½ மாதங்கள் ஆகியும் அந்தநிறுவனம் ராஜசேகருக்கு காப்பீடு சான்றிதழ் வழங்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் பலமுறை அந்த நிறுவனத்திடம் கேட்டும் எந்த தகவலும் இல்லையாம். இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக ராஜசேகர் இறந்து விட்டார்.

குறைதீர் ஆணையத்தில் வழக்கு

இதனையடுத்து மகேஸ்வரி அந்த நிறுவனத்திற்கு மனு செய்து தனது கணவர் இறந்த விபரத்தை தெரிவித்து காப்பீடு தொகையை செலுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் காப்பீடு குறித்து ராஜசேகர் முழுவதையும் நிறைவேற்றவில்லை எனவும், அதனால் ஒப்பந்தம் முழுமையாக வில்லை எனவும் காப்பீட்டுத்தொகையை வழங்க இயலாது எனவும் கூறி நிராகரித்து உள்ளது. இதுகுறித்து மகேஸ்வரி கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

காப்பீடு வழங்க உத்தரவு

இந்த வழக்கை ஆணையத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முழுகையாக விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில், மகேஸ்வரி மற்றும் குழந்தைகளுக்கு காப்பீடு தொகை வழங்குவதில் அந்த நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது. முறையற்ற வணிகத்தில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

இதனால் அந்த நிறுவனம், மனுதாரர் மகேஸ்வரி மற்றும் அவரது 2 குழந்தைகளுக்கும் காப்பீடு தொகையான ரூ.50 லட்சத்தை தர மறுத்த தேதி முதல் தொகை வசூலிக்கும் தேதி வரை 9 சதவீதம் வட்டியுடன் தொகையை செலுத்த வேண்டும். சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிகத்திற்கும் இழப்பீடாக ரூ.2 லட்சத்தை 9 சதவீத ஆண்டு வட்டியுடன், வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து வசூலாகும் தேதி வரை சேர்த்தும், வழக்கு செலவு தொகையாக ரூ.25 ஆயிரம் தீர்ப்பு தேதியில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.


Next Story