ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்-அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்


ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்-அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்
x

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருச்சி

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.159 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் ரூ.84 கோடியே 78 லட்சம் மதிப்பில் பல்வகை பயன்பாட்டு மையம், ரூ.65 கோடியே 90 லட்சம் மதிப்பில் கனரக சரக்கு வாகன முனையம், ரூ.40 கோடியே 30 லட்சம் மதிப்பில் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என்று மொத்தம் ரூ.349 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

464 பஸ் நிறுத்த தடங்கள்

பஞ்சப்பூரில் 40.60 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ்நிலையத்தில் 7.02 ஏக்கர் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 124 புறநகர் பஸ் நிறுத்த தடங்கள், 142 நீண்ட நேர பஸ்நிறுத்த தடங்கள், 78 குறைந்த நேர பஸ் நிறுத்த தடங்கள் என்று மொத்தம் 404 பஸ்நிறுத்த தடங்களும், 60 டவுண் பஸ்கள் நிறுத்த தடங்களும் அமைய உள்ளன.

அத்துடன் 70 கடைகள் அமைக்கப்படுகிறது. இதுதவிர 556 நான்கு சக்கர வாகனங்கள், 1,125 இருசக்கர வாகனங்கள், 350 ஆட்டோக்கள் நிறுத்தும் வசதி இந்த பஸ்நிலையத்தில் உண்டு. மேலும் நகரும் படிக்கட்டு வசதியும் இந்த பஸ்நிலையத்தில் அமைய உள்ளன.

கனரக வாகன மையம்

இதுபோல் 5.20 ஏக்கர் பரப்பளவில் 4 தளங்களுடன் 342 கடைகளுடன் பல்வகை பயன்பாட்டு மையமும், 29 ஏக்கரில் கனரக வாகன மையமும் அமைய உள்ளன. இதில் கனரக வாகன மையம் தொகுப்பு-1-ல் 256 வாகனங்களும், தொகுப்பு-2-ல் 104 வாகனங்களும் நிறுத்த வசதி செய்யப்பட உள்ளது. அத்துடன் தரைத்தளத்தில் 20 கடைகளும், முதல் தளத்தில் தங்குமிடம் வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது.

மேலும், 1,048 மீட்டர் நீளம், 36 மீட்டர் அகலத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பகுதியில் சிமெண்டு சாலையும், 744 மீட்டர் நீளம், 24 மீட்டர் அகலத்தில் கனரக சரக்கு வாகன முனைய பகுதியில் சிமெண்டு சாலையும், அமைக்கப்பட உள்ளன. அத்துடன் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மாநகர பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story