மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

ஆரோக்கியம், விளையாட்டு, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை அமர்சேவா சங்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
சென்னை,
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் ராமகிருஷ்ணன் என்பவரால் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமர்சேவா சங்கம் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை கடந்த 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இலவச தங்குமிடம், உணவு, உடை, மருத்துவம், தொழிற்பயிற்சி ஆகியவற்றுடன் கூடிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியும் இந்த சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா மற்றும் அமர்சேவா சங்கம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொடக்க விழா ஆகியவை சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழாவுக்கு அமர்சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.சங்கரராமன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன்பின்பு அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா மலரை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வணங்குகிறேன்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தி அவர்கள் பொருளாதாரத்தில் சுய சார்புடன் இருப்பதற்கு தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்பு கல்வியை அமர்சேவா சங்கம் 40 ஆண்டுகளாக அளித்து வருகிறது.
மனிதாபிமானத்தோடு செயல்படக்கூடிய ஆயக்குடி நிறுவனத்தை வணங்குகிறேன், மதிக்கிறேன், போற்றுகிறேன்.
முன்னோடி திட்டம்
அமர்சேவா சங்கத்தின் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு அரசு தேவையான உதவிகளை நிச்சயமாக செய்யும்.
3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆரோக்கியம், தரமான கல்வி, விளையாட்டு பயிற்சி, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை பெறும் வகையில் தமிழக அரசுடன் இணைந்து அமர்சேவா சங்கம் செயல்படுத்த உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தை தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுஒரு முன்னோடி திட்டமாகும்.
மாற்றுத்திறனாளிகளை குழந்தை பருவம் முதற்கொண்டு கண்டறிந்து, அவர்களின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை, சமவாய்ப்பு எனும் சமுதாய சமூகநீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முழுமூச்சுடன் செயலாற்றி வருகின்றது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்ற அமர்சேவா சங்கம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனது திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருது
அமர்சேவா சங்கத்தின் செயல்பாடுகளுக்கு பெரும் துணையாக இருந்து வரும் சமூக ஆர்வலர்கள், டாக்டர்கள், நிதி உதவி செய்து வருபவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார்.
விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் அமர்சேவா சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.






