ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு சேவை மையம் தொடக்கம்


ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு சேவை மையம் தொடக்கம்
x

ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீர்நிலைகளை சுத்தம் செய்ய செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி ஊராட்சியில் உள்ள சுய உதவிக்குழுக்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொன்பரப்பி ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களில் இருந்தும் 15 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொன்பரப்பி ஊராட்சியில் உள்ள அய்யனார் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியினை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டார். மேலும், கிராமங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செந்துறை ஒன்றியத்தில் பொன்பரப்பி, கீழமாளிகை, சிறுகளத்தூர் ஆகிய ஊராட்சிகளை ஒன்றிணைத்து பொன்பரப்பியில் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்பு ஆரம்பிக்கப்பட்டு பொன்பரப்பி ஊராட்சியில் வாழ்வாதார சேவை மையத்தினை கலெக்டர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்த மையத்தில் விவசாயிகள் வேளாண்மை குறித்த தகவல்களை பெறுவதற்கு தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை வேளாண்மைக்கு உரிய பூச்சி விரட்டி மற்றும் உயிரி உரங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு சிறு வேளாண் கருவி வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story