ஒருங்கிணைந்த கடல் அலங்கார மீன் வளர்ப்பு மையம்


ஒருங்கிணைந்த கடல் அலங்கார மீன் வளர்ப்பு மையம்
x

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் ஒருங்கிணைந்த கடல் அலங்கார மீன்வளர்ப்பு மையத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் ஒருங்கிணைந்த கடல் அலங்கார மீன்வளர்ப்பு மையத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

ஆய்வு

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் பிரதம மந்திரி மத்சய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் ரூ.30 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கடல் அலங்கார மீன் வளர்ப்பு மையத்தை ஒரு பயனாளி அமைத்து உள்ளார். அரசு மானியமாக அவருக்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று அந்த மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் அலங்கார மீன்களை சேகரித்து, அவைகளை தொட்டிகளில் வளர்த்து, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பகுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாக அந்த பயனாளி தெரிவித்தார். வேறு பகுதியில் இல்லாத டேம்செல் மீன்கள், கடல் அனிமோன்ஸ், லயன் மீன்கள், ஸ்டார் மீன்கள், அர்சின்ஸ், ஏஞ்சல் மீன்கள் போன்ற கடல் அலங்கார மீன்கள் இந்த மையத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற கடல் அலங்கார மீன்களை மக்களின் பார்வைக்காக பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தொழிலாக செய்ய தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என மீன்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மானிய டீசல்

தொடர்ந்து தருவைகுளம் கிராமத்தில் மீன்பிடித் தடைக்கால நிவாரண தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயனாளிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு உண்மை தன்மையை கண்டறிந்தார். அப்போது தருவைகுளம் மீனவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மானிய விலை டீசலை உயர்த்தி வழங்க வேண்டும். தருவைகுளம் மீன் இறங்குதளத்துக்கு செல்ல தெற்கு பகுதி வழியாக புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

மேலும், நாட்டுப் படகு மூலம் மீன்பிடிக்க செல்லும் போது, விசைப்படகுகளால் வலைகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை உடனடியாக மீன்துறை அலுவலகத்துக்கும், மாவட்ட கலெக்டர் கவனத்துக்கும் கொண்டு வந்தால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.


Next Story