ஆழித்தேரை பாதுகாக்க தற்காலிக கூரை அமைக்கும் பணி தீவிரம்
ஆழித்தேரை பாதுகாக்க தற்காலிக கூரை அமைக்கும் பணி தீவிரம்
வெயில்-மழையில் இருந்து ஆழித்தேரை பாதுகாக்க தற்காலிக கூரை அமைக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகராஜர் கோவில்
திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடக்கும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தேரோட்டம் முடிந்ததும் இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை மூலம் தேரை மூடுவது வழக்கம்.
இதனால் பிரமாண்டமான ஆழித்தேரின் அழகிய தோற்றத்தை சாதாரண நாட்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் போனது. இதனால் இந்த ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது.
ஆடிப்பூர விழா தேரோட்டம்
இந்த ஆண்டு தேரோட்டம் கடந்த 1-ந் தேதி நடந்தது. இதையடுத்து ஆடிப்பூர விழா அன்று அம்பாள் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர், ஆழித்தேரை கடந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து இழுத்து செல்லும்போது இடையூறாக அமையும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் உரசினால் எளிதாக சேதமடையும் நிலையும் உருவானது. இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதியாக ஆழித்தேர் தற்காலிக இரும்பு தகடுகளால் மூடப்படும்.
தற்காலிக கூரை அமைக்கும் பணி
அதன்படி நேற்றுமுன்தினம் முதல் ஆழித்தேருக்கு இரும்பு தகட்டை கொண்டு தற்காலிக கூரை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
இதற்காக சாரம் அமைக்கும் பணிகள் முடிந்து இரும்பு தகடுகளை மேற்கூரையில் அமைக்கும் பணிகளில் தீவிரமாக பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.
இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், ஆழித்தேரை தேரோட்டம் அல்லாத நாட்களில் பொதுமக்கள் காணும் வகையில் பல லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.
தேரோட்டம் முடிந்த பின்னர் ஆழித்தேரை கண்ணாடி கூண்டு கொண்டு மூடுவார்கள். ஒவ்வொரு முறையும் கண்ணாடி கூண்டை அகற்றவும், திரும்பி அமைக்கவும் பல லட்சம் ரூபாய் வரை செலவு ஆகிறது.
கண்ணாடி கூண்டு சேதமடைய வாய்ப்பு
ஆடிப்பூர அம்பாள் தேராட்டத்தின் அன்று ஆழித்தேர் கண்ணாடி கூண்டு சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஆடிப்பூர தேரோட்டம் முடியும் வரை ஆழித்தேருக்கு தற்காலிக கூரை அமைக்கப்படும். இந்த தற்காலிக கூரையின் மூலம் ஆழித்தேரை மழை மற்றும் வெயில்களில் இருந்து பாதுகாக்க முடியும். இதேபோல் மற்ற தேர்களுக்கும் தற்காலிக கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.