பழனியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்


பழனியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Oct 2023 8:15 PM GMT (Updated: 6 Oct 2023 8:15 PM GMT)

பழனியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

பழனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கடந்த நகராட்சி கூட்டத்தின்போது, மழை காலங்களில் வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். எனவே வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நகராட்சியில் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து நகராட்சி ஆணையர் பாலமுருகன் உத்தரவின்பேரில், பழனி நகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள சாக்கடை கால்வாயில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதேபோல் மழைக்காலத்தை முன்னிட்டு நகரின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குறிப்பாக கொசு உற்பத்தியை தடுக்க நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு உற்பத்திக்கான சூழல் உள்ளதா? என சோதனை செய்கின்றனர். அப்போது கொசு உற்பத்தியை தடுக்க வேண்டிய வழிமுறை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பழனியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.


Next Story