கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம்(ஜூன்) 5-ந்தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட புத்தகம் மற்றும் டி.என்.பி.எல். நிறுவனத்தில் இருந்து பாடக்குறிப்பேடுகள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலத்திற்கும் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பாடப்புத்தகம் மற்றும் பாடக்குறிப்பேடுகள் கடந்த வாரம் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது.
163 பள்ளிகளுக்கு...
இந்த நிலையில் அந்த புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகளை அந்தந்த பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 69 அரசு உயர்நிலைப்பள்ளி, 86 அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 163 பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் பாடக்குறிப்பேடுகள் வழங்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கும் வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 23-ந்தேதிக்குள் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு விடும் என்று தெரிவித்தனர்.