கோவை ரெயில்வே பணிமனையை ரூ.2¼ கோடியில் மேம்படுத்தும் பணி தீவிரம்


கோவை ரெயில்வே பணிமனையை ரூ.2¼ கோடியில் மேம்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:30 AM IST (Updated: 25 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க கோவை பணிமனையை ரூ.2¼ கோடியில் மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க கோவை பணிமனையை ரூ.2¼ கோடியில் மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வந்தே பாரத் ரெயில்

ரெயில்வே வாரியம் புதிதாக வந்தே பாரத் என்ற அதிவேக ரெயில் சேவையை தொடங்கியுள்ளது. 130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயில் முதன் முதலாக டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து டெல்லி-கத்ரா, காந்திநகர்-மும்பை, சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் விரைவில் தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக ரெயில்வே பணிமனை மேம்படுத்த ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பணிமனை விரிவாக்கம்

இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் மண்டல ரெயில்வே வாரியத்துக்கு ஆணையையும் பிறப்பித்தது. அதன்படி கோவையில் 3 ரேக்குகள் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கோவையில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் 7 அதிவிரைவு, 2 விரைவு ரெயில் மற்றும் 1 பயணிகள் ரெயில்களின் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை ெரயில்வே சந்திப்பு அருகே உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிக்கும் பணிமனையில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் வகையில் பணிமனையை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரூ.2¼ கோடி

இதுகுறித்து கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் உள்ள ரெயில் பெட்டி பராமரிப்பு பணிமனையில் (கோச்சிங் டிப்போ) 3 ரேக்குகள் ரூ.2.28 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் 2 வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை நிறுத்தி பராமரிக்க முடியும். இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. வருகிற ஜனவரி மாதத்துக்குள் இந்த பணிகள் நிறைவடைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story