கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணிகள் தீவிரம்


கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணிகள் தீவிரம்
x

கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குறைந்த விலைக்கு இயற்கை உரம்

கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா குன்னூர் செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ளது. சுமார் 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளம் மீட்பு பூங்காவில், குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டிடம், மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் மையம், வாழை இலைகளை சிறு துகள்களாக அரைக்கும் எந்திரம், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அரைக்கும் எந்திரம், மாதிரி காய்கறி தோட்டம், பூந்தோட்டம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. மேலும் கடந்த வருடம் மக்காத குப்பைகளை எரிப்பதற்காக ரூபாய் 40 லட்சம் செலவில் புதிய எந்திரம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், பேரூராட்சி தூய்மை காவலர்களால் வீடு தோறும் சென்று சேகரிக்கப்பட்டு, வளம் மீட்பு பூங்காவிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டுசெல்லப்படும் சுமார் 4 டன் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யப்படுகிறது.

100 சதவீதம் மறு சுழற்சி

மேலும் இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப் பட்டு வருவதுடன், அரைக்கப்பட்ட சிறு பிளாஸ்டிக் துகள்கள் சாலை போடுவதற்கு உபயோகப் படுத்தவும், மக்காத குப்பைகளை புதிய எந்திரம் மூலம் எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் சிமெண்டு கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது தோட்டக்கலைத்துறை இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருவதால், இயற்கை உரத்தை வாங்க விவசாயிகள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். காலை நேரத்தில் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 பேர் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் அனைவரும் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவிற்கு சென்று, சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, அவற்றை மறு சுழற்சி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.


இதன் காரணமாக குப்பைகள் அனைத்தும் நூறு சதவீத மறு சுழற்சி செய்யபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தற்போது கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்பட்ட சுமார் 5 டன் இயற்கை உரம் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது.


Next Story