தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
மன்னார்குடியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மன்னார்குடி:
மன்னார்குடி பஸ் நிலையம் ரூ.27 கோடி மதிப்பீட்டில், பிரதான பஸ் நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பஸ் நிலையம் உள்ளிட்டவைகளை இணைத்து புதிய நவீன பஸ் நிலையமாக கட்டப்பட உள்ளது.அதனால் இந்த புதிய பஸ் நிலையத்திற்காக, பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகளை காலி செய்து நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து கடை உரிமையாளர்களும் தங்களது கடைகளை காலி செய்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.இதனையடுத்து பழைய கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிய பஸ் நிலையம் அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மன்னார்குடி தேரடியில் உள்ள நகராட்சி கலையரங்க திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அங்கு தளம் அமைக்கும் பணி முடிந்ததும் அங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன.