லோயர்கேம்ப்-மதுரை குடிநீர் திட்டப் பணிகள் தீவிரம்


லோயர்கேம்ப்-மதுரை குடிநீர் திட்டப் பணிகள் தீவிரம்
x

விவசாயிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் லோயர்கேம்ப்-மதுரை குடிநீர் திட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தேனி

கூட்டுக்குடிநீர் திட்டம்

மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லும் வகையில் ரூ.1,295 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்துக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த திட்டத்தை கைவிட்டு, வைகை அணையில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பணிகள் தீவிரம்

விவசாயிகளின் எதிர்ப்புகள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் இந்த குடிநீர் திட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான ராட்சத குழாய்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆங்காங்கே இறக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், பணி நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்ல கலெக்டர் அலுவலகம் முன்பு இறங்கி வைக்கப்பட்டு இருந்த ராட்சத குழாய்கள் கிரேன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டன. இதற்காக சிறிது நேரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மதுரை சாலையில் ஒரு புறம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story