நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்


நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Dec 2022 7:45 PM GMT (Updated: 10 Dec 2022 7:45 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம்

தேவூர்:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரும்பு சாகுபடி

தேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் 10 மாதங்களில் அறுவடைக்கு வரக்கூடிய கரும்புகளை சாகுபடி செய்துள்ளனர். தற்போது கரும்பு அறுவடையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து தனியார் கரும்பு ஆலைகள் உரிமையாளர்கள் கொள்முதல் செய்து வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் பணி கரும்பு ஆலைகளில் நடைபெறுகிறது. தேவூர், சென்றாயனூர், செட்டிபட்டி, மூலப்பாதை, வாய்க்கால் கரை, குஞ்சாம்பாளையம், தண்ணிதாசனூர், பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்புகரட்டூர், சோழக்கவுண்டனூர், பெரமாச்சிபாளையம், ஒக்கிலிப்பட்டி, பொன்னம்பாளையம், ஒடசக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளில் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதுடன், நாட்டு சர்க்கரை, வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடக்கிறது.

அரவை ஆலை

தனியார் கரும்பு அரவை ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் நேரடியாக சென்று வெட்டுக்கூலி, வண்டி வாடகை உள்பட 1 டன் கரும்பு ரூ.3 ஆயிரத்து 500-க்கு கொள்முதல் செய்து வருகிறார்கள். அதனை கரும்பு அரவை ஆலைகளில் தொழிலாளர்களை பயன்படுத்தி நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கிறார்கள். பின்னர் அதனை ஈரோடு மாவட்டத்துக்கும், சேலம் மார்க்கெட்டுக்கும் அனுப்பி விற்பனை செய்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, சித்தோடு பகுதிகளில் 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் நாட்டு சர்க்கரை ரூ.1,150 முதல் ரூ.1,200 வீதமும், குண்டு வெல்லம் 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,200 முதல் ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் 30 கிலோ எடை கொண்ட சிப்பம் ரூ.1,180 முதல் ரூ.1,250 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

விற்பனை அதிகரிப்பு

இதனிடையே சேலம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உற்பத்தியாகும் வெல்லம், அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே வண்டிக்காரன் நகர் பகுதியில் உள்ள மாவட்ட கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் பொது ஏலத்தில் விற்பனை செய்கிறார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.

இது குறித்து வெல்லம் வியாபாரிகள் கூறுகையில், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது சபரிமலை சீசன் என்பதால் வெல்லத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 டன் முதல் 70 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 80 டன் முதல் 100 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. இங்கு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அச்சு வெல்லம் ரூ.1,230 முதல் ரூ.1,290 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெல்லம் ரூ.41 முதல் ரூ.43 என விற்கப்படுகிறது. கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வெல்லம் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.


Next Story