நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்


நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
x
தினத்தந்தி 20 Jun 2023 9:15 PM GMT (Updated: 20 Jun 2023 9:15 PM GMT)

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

தென்மேற்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நீலகிரியை பொருத்தவரை தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர் மற்றும் வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடை மழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும்.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்தது.

கடும் பனிமூட்டம்

இந்தநிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மதியம் 12 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. மேலும் குளிர் காற்று வீசியதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி அடைந்தனர்.

அதன் பின்னர் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை. தொடர்ந்து வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு 82 சதவீதமாக இருந்தது. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, மசினகுடி பகுதியிலும் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவியது. நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.

நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி-6 மி.மீ., கிளன்மார்கன்-40 மி.மீ., அப்பர்பவானி-25 மி.மீ., கோத்தகிரி-17 மி.மீ., கீழ் கோத்தகிரி-28 மி.மீ., எடப்பள்ளி மற்றும் கேத்தியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளன.


Next Story