வாலிநோக்கம் அரசு உப்பளங்களுக்கு கடல்நீர் கொண்டு செல்லும் பணி தீவிரம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி அதிகரித்து உள்ளது. வாலிநோக்கம் அரசு உப்பளங்களுக்கு கடல்நீர் கொண்டு செல்லும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
சாயல்குடி,
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி அதிகரித்து உள்ளது. வாலிநோக்கம் அரசு உப்பளங்களுக்கு கடல்நீர் கொண்டு செல்லும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
4 ஆயிரம் உப்பள பாத்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது.அதற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் நடந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சாயல்குடி அருகே வாலி நோக்கத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள பாத்திகள் உள்ளன.
இது தவிர ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை அருகே ஆனைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட ஊர்களிலும் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் நடந்து வருகின்றது.
சீசன் களை கட்டியது
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி சீசன் ஆகும். இந்த நிலையில் இந்த ஆண்டின் உப்பு உற்பத்தி சீசன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கியது. சீசன் தொடங்கிய நிலையில் சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் உள்ள அரசு உப்பளங்களில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாகவே தொடங்கியது.
ஆனால் இந்த ஆண்டு கோடை கால மழை தொடர்ந்து பெய்ததால் கல் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சாயல்குடி சுற்றிய பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் களைகட்டி உள்ளது.
கடல் நீர் கொண்டு வரப்பட்டது
குறிப்பாக வாலிநோக்கம் கடல் பகுதியில் இருந்து ஏராளமான ராட்சத குழாய்கள் கடலுக்குள் பதிக்கப்பட்டு ராட்சத மோட்டார் மூலம் பம்பிங் செய்து குழாய் மூலம் கடல் நீரானது கொண்டு வரப்பட்டு அனைத்துப் பாத்திகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு கடல் நீரை பாத்திகளில் வடிகட்டி அதில் இருந்து கல் உப்பை பிரித்து எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல் அரசு உப்பு உற்பத்தி நிறுவனத்தில் இருந்து விளைச்சல் ஆகும் உப்பு பாக்கெட்களில் பேக்கிங் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் கல் உப்பு மிஷின்களில் அரைத்து அயோடின் சால்ட் உப்புகளாகவும் பேக்கிங் செய்தும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதைத்தவிர லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாகவும் மொத்தமாகவும் கல் உப்பு அனுப்பி வைக்கப்படுகின்றன.
வாலிநோக்கம் பகுதியில் உப்பு உற்பத்திக்காக ராட்சத குழாய்கள் மூலம் கடல் நீர் மோட்டார் மூலம் பம்பிங் செய்து அருவி போல் விழுந்து பாத்திக்கு கொண்டு செல்லப்படுவதை அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.