107 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்


107 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்
x

107 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க 107 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடிநீர் வினியோகம்

கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர மாநகராட்சி 5 மண்டலங்களிலும் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் எடுக்கப்படும் உப்பு தண்ணீர் அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சில ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டதால் அதில் இருந்து உப்பு தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக மாநகராட்சியில் உப்பு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில் கோவை மாநகராட்சி கூட்டத்தில் உப்பு தண்ணீர் பற்றாற்குறை உள்ள வார்டுகளில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து மொத்தம் 107 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.5 கோடியில் 107 இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்படும். இதற்கான ஒப்புதல் மாநகராட்சியின் கூட்டத்தில் பெறப்பட்டு உள்ளது. மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் மற்றும் வடக்கு மண்டல பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story