சேலத்தில் தீவிர தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாம் கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்


சேலத்தில்  தீவிர தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாம்  கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
x

சேலத்தில் தீவிர தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம்

சேலம்

விழிப்புணர்வு முகாம்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக தூய்மை பணியின் அவசியம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து எனது குப்பை-எனது பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை சுடர் ஓட்டத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 30 நபர்களை கொண்ட இந்த சுடர் ஓட்டக்குழு, சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி 5 ரோடு, அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, முள்ளுவாடி கேட் வழியாக 6 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.

துண்டு பிரசுரங்கள்

இதேபோல், தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை புதிய பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலெக்டர், மேயர் ஆகியோர் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில் நகரங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் இந்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும். தூய்மை பணியாளர்கள் தான் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என்று பாராமல் பொதுமக்கள் எல்லோரும் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும். தூய்மை என்பது அழகு, அது ஆரோக்கியம். தூய்மை பணி என்பதை மக்கள் இயக்கமாக மாற வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

மீண்டும் மஞ்சப்பை

பொதுமக்களுக்கு தூய்மையின் அவசியம் பற்றி வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிகர்கள், வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப்பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதா தேவி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாநகர நல அலுவலர் யோகானந்த், போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, மண்டலக் குழுத்தலைவர்கள் எஸ்.டி.கலையமுதன், உமாராணி, அசோகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story