நாமக்கல்லில் போலீசார் தீவிர கண்காணிப்பு


நாமக்கல்லில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x

நாமக்கல்லில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

போலீசார் கண்காணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடை விதித்து இருந்தனர். இதேபோல் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

மேலும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடிப்பது, நடனம் ஆடுவது, கேக் வெட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தனர். பைக் ரேசில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இதுபோன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்களா? என மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, இரவு முழுவதும் கண்காணிக்கப்பட்டன.

சிறப்பு பூஜை

இருப்பினும் நாமக்கல் நகரில் ஆங்காங்கே தெருக்களில் கூடிய இளைஞர்கள் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர். பெண்கள் வீடுகளின் முன்பு கோலங்கள் வரைந்து புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story