மருத்துவக்கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு; கலெக்டர் தகவல்


மருத்துவக்கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் தமிழகத்துக்கு கொண்டு வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கூறினார்.

தென்காசி

கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் தமிழகத்துக்கு கொண்டு வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கூறினார்.

கலெக்டர் திறந்து வைத்தார்

தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் காதி கிராப்ட் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று காலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் புளியரை பார்டர் வழியாக தமிழகத்தின் தென்காசி மாவட்டத்துக்கு கொண்டு வந்து கொட்டப்படுவதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை அவ்வாறு கொண்டு வந்ததற்காக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புளியரை வழியாக அதிக லாரிகள் செல்வதால் இங்குள்ள போக்குவரத்து சோதனை சாவடி மற்றும் காவல்துறை சோதனை சாவடி ஆகிய இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது. வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகு மருத்துவ கழிவுகள் இங்கு கொண்டுவரப்படுவது இல்லை.

தீவிர கண்காணிப்பு

மேலும் இதுகுறித்து சோதனை செய்ய செயற்பொறியாளர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை நெல்லைக்கு முறையாக கொண்டு செல்லப்பட்டு அது அழிக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் இவற்றை கொட்டாத அளவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் தீவிர கண்காணிப்பும், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆலங்குளத்திலும், கீழப்பாவூரிலும் இந்த காய்ச்சல் உள்ளதாக அறிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இலஞ்சி பேரூராட்சி தலைவி சின்னத்தாய் சண்முகநாதன், துணைத்தலைவர் முத்தையா பாண்டியன், கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story