பழமையான கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி தீவிரம்


பழமையான கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி தீவிரம்
x

வேலூர் கோட்டையில் பழமையான கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர்

பழைமையான கட்டிடங்கள்

வேலூர் மாநகரின் முக்கிய சுற்றுலா தலமாக வேலூர் கோட்டை திகழ்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கோட்டையில் தான் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. காலப்போக்கில் பல்வேறு இடங்களுக்கு அந்த அலுவலகங்கள் இடம்மாறின. எனவே கோட்டையில் உள்ள கட்டிடங்கள் பயன்பாடின்றி உள்ளது. இதனால் அந்த கட்டிடங்கள் சிதிலமடைந்து வருகிறது. பல்வேறு கட்டிடங்கள் இடிந்தும், இடியும் நிலையிலும் காணப்படுகிறது.

இதை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனும் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். அப்போது இந்த கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க தொல்லியத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பணிகள் தீவிரம்

இந்தநிலையில் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தின் மேற்பகுதியில் உள்ள சேதமடைந்த கூரைகள், கம்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கோட்டையில் உள்ள கட்டிடங்களை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பயன்பாட்டில் இல்லாத பழமையான வேலூர் தாலுகா அலுவலகம், வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலக கட்டிடங்கள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. சேதமடைந்த பொருட்கள் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மற்ற கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story