சென்னை பெருநகர அணி ஒட்டு மொத்த சாம்பியன்


சென்னை பெருநகர அணி ஒட்டு மொத்த சாம்பியன்
x

மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் சென்னை பெருநகர அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி

விளையாட்டு போட்டி

62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான ஆண் மற்றும் பெண்களுக்கான தடகளம், சைக்கிளிங், கோ-கோ விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 3-ந் தேதி முதல் நடந்தது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 9 மண்டலங்களை சேர்ந்த 402 வீரர்களும், 190 வீராங்கனைகளும், 146 அமைச்சு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆயுதப்படை அணி 166 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், சென்னை பெருநகர அணி 141 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் பிரிவில் சென்னை பெருநகர அணி 186 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், மேற்கு மண்டல அணி 116 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்தன.

ஒட்டு மொத்த சாம்பியன்

இதனை தொடர்ந்து 327 புள்ளிகள் பெற்று சென்னை பெருநகர போலீஸ் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 190 புள்ளிகளுடன் மேற்கு மண்டல அணி 2-ம் இடத்தை பெற்றது. இதேபோல் தனிநபர் திறனில் ஆண்கள் பிரிவில் ஆயுதப்படை போலீஸ் அணியை சேர்ந்த சகாயராஜ் 1072 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பெண்கள் பிரிவில் சென்னை பெருநகர போலீஸ் அணியை சேர்ந்த வர்ஷா 1,011 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும் பிடித்தனர். இதைத்தொடர்ந்து போட்டிகளின் நிறைவு நாளான நேற்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஐ.ஜி. ராதிகா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்ரீதேவி, அன்பு, சிறப்பு காவல் படை கமாண்டண்ட் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story