தென்னைக்கு நடுவே உளுந்து ஊடுபயிர் சாகுபடி


தென்னைக்கு  நடுவே உளுந்து ஊடுபயிர் சாகுபடி
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சியில் தென்னைக்கு நடுவே உளுந்து ஊடுபயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்

கரம்பயம், ஏப்.9-பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சியில் தென்னைக்கு நடுவே உளுந்து ஊடுபயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

உளுந்து சாகுபடி

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதல்சேரி ஊராட்சியில் ராமசாமி என்ற விவசாயி தனது 3 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்து வருகிறார். தென்னை சாகுபடிக்கு போக மீதி தண்ணீர் உபரி நீராகவும் அந்த நிலம் வேறு பயன் இல்லாமல் இருப்பதால் அந்த நிலத்தை வேறு ஏதாவது தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த வருடமும் இந்த வருடமும் தென்னைக்கு நடுவே உளுந்து சாகுபடி செய்ய திட்டமிட்டு சிறப்பாக உளுந்து சாகுபடி செய்து வருகிறார்.

லாபம்

இந்த வகையில் 3 ஏக்கர் நிலப்பரப்பிலும் உளுந்து சாகுபடி செய்ய உளுந்து விதை விதைத்து தற்போது உளுந்து செடிகள் ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளது. தினமும் காலை மாலை இரு நேரமும் தென்னந்தோப்புக்கு வந்து தென்னை மரங்களை பார்க்கும் போது உளுந்து பயிர்களையும் பராமரித்து வருகிறார்.

தொடர்ந்து 2 முறை களைக்கொல்லி அடிப்பது, உளுந்து செடி நன்றாக வளர்வதற்கும் பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதற்கும் மருந்து அடிப்பது, உளுந்து பருவம் வந்த பிறகு அறுவடை செய்து அதை தட்டி காய வைத்து மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு செல்வது உட்பட இவை அனைத்தும் சேர்த்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகுமாம்.

சம்பள பிரச்சினை

இந்த அனைத்து வேலைகளையும் முடிந்து உளுந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யும் போது சுமார் ரூ.1 லட்சம் முதல் 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகும். இவ்வாறு விற்பனை ஆகும் போது செலவுகள் போக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை 80 நாட்களில் உளுந்து ஊடுபயரில் நாம் லாபம் பெறலாம். குறிப்பாக சாகுபடி பணிகளுக்கு வெளி ஆட்களை பயன்படுத்தாமல் தனி ஆளாக வயலின் உரிமையாளர் மட்டுமே நின்று பணிகளை செய்து முடித்தால் சம்பள பிரச்சினையின்றி செலவை மிச்சப்படுத்தலாம் என்று விவசாயி ராமசாமி கூறினார்.


Next Story