அசல் தொகையை செலுத்தினால் வட்டி தள்ளுபடி
தாட்கோ மூலம் கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை,
தாட்கோ மூலம் கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
தள்ளுபடி
மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் (NSFDC) மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகத்தின் கடன் நிதி உதவி திட்டத்தில் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
நிலுவையில்லா சான்று
எனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் (NSFDC) மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் (NSKFDC) ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தில் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.
இத்திட்டம் வருகிற டிசம்பர் 31-ம்தேதி வரை செயல்படுத்தப்படும். மேலும் கடந்த 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால், வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.