கோவையில் சர்வ சமய மதநல்லிணக்க விழா
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் சர்வசமய மத நல்லிணக்க விழா நடந்தது.
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் 'ஒன்றிணைவோம் கோவைக்காக' என்ற சர்வசமய மத நல்லிணக்க விழா கோவை புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஐ.எம்.ஏ. ஹாலில் நடந்தது. விழாவுக்கு ஐக்கிய ஜமாஅத் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பஷீர் அகமது தலைமை தாங்கினார்.
பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் சிரவைவாதீனம் குமர குருபர சுவாமிகள், சி.எஸ்.ஐ. கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர், கோவை மறை மாவட்ட முதன்மை குரு தனசேகர், குருத்வாரா சபை தலைவர் குர்பிரீத் சிங், மாநில ஜமாத் உலமா தலைவர் முகமது அலி, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொதுச்செயலாளர் ஹாஜி அப்துல் ஜப்பார் வரவேற்றார்.
விழாவில், முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் பங்கேற்று பேசும்போது, மத நல்லிணக்கத்தை பேணிக்காக்க இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது நல்ல சிந்தனை. இதுபோன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும். மற்றவர்களின் மத நம்பிக்கையை மதிக்கிற உணர்வுகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.
தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், யார் செய்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும்.தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், யார் செய்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது கோவையை அமைதியானதாக மாற்ற வேண்டியது நமது பொறுப்பு ஆகும் என்றார்.
இதில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் எம்.ஏ.முகமது இம்தாதி, ம.தி.மு.க. ஆர்.ஆர்.மோகன் குமார், சென்னை மொபைல்ஸ் சம்சுஅலி, வக்கீல் நந்தகுமார், டாக்டர் பஷீர் அகமது, சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஹயாதுல் இஸ்லாம் சுத்னத் ஜமாஅத் தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.